நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
*
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
*
குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!
*
உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!
*
எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!
பார்வைகளால் கவிதை எழுதுகிறேன்.
முத்தங்களால் இசை அமைக்கிறாய்.
“சுற்றுலா போக என்னவெல்லாம்
எடுத்து வைக்க?” – அப்பாவியாய்க் கேட்கிறாய்.
இரண்டு இதயமும், ஒரு கனவும் போதாதா?
யாருக்கும் கேட்டுவிடாமல்
சத்தமின்றிதான் முத்தமிடுகிறாய்.
இருந்தும் சங்கடத்தில் நெளிகின்றன…
செல்பேசிகள் இரண்டும்!
“எப்போதென்னைக்
காதலிக்க ஆரம்பித்தாய்?”
எத்தனை முறை
கேட்டாலும் உதட்டுப் பிதுக்கலே பதிலாய்…
ம்ம்ம்…எப்போது மலர்ந்தோமென
எந்த மலருக்குதான் தெரிகிறது?
கோபம்…
சூரியனுக்கு வந்தால்
அக்னி நட்சத்திரம்.
உனக்கு வந்தால்
அக்னி நிலா!
என் பெயரை
தமிழில் இருந்து
காதலுக்கு மொழிபெயர்த்தேன்.
உன் பெயர் வந்தது!என் கண்களைக் கட்டிப்பிடித்து
உன் பார்வை செய்யும் குறும்புகள்தான்
‘கண் கட்டி வித்தை’யா?*
விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
இமைவாசலில் தவம் கிடக்கின்றன
நம் பார்வைகள்.*
நீ பார்க்கும்பொழுதெல்லாம்
கண்களை மூடிக்கொள்கிறேனா?
உன் பார்வைகளை இமைக்குள் சேமிக்கிறேன்!*
நேற்றிரவு நிலவை
நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
நிலா குளிர்ச்சியாக இருந்தது!*
செடி நீட்டும் பூவுடன் சேர்த்து
பூ நீட்டும் செடியினையும் நேசிக்க
உன் பார்வைதான் கற்றுக் கொடுத்தது.உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!*
இமைப்பொழுதிலும்
கவிதை எழுதுவேன்.
இமைப்பது நீயெனில்.*
உலகின் பெண்களுக்கெல்லாம்
உனதுருவம் அமைந்துவிட்ட மாயக்கனவிலும்…
உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
உனது பார்வை!*
நீ குடை விரித்ததும்
குடை சாய்ந்தது
மழை வண்டி!*
இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்
அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன…
சில கவிதைகள்!
Filed Under :
Friday, July 23, 2010
0 comments:
Post a Comment